நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது இஸ்ரோவின் 'நேவிக்' செயற்கைக்கோள்


ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஐ என்கின்ற வழிக்காட்டி செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படவுள்ளது. இந்தச் செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி. சி41 ராக்கெட் மூலம் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ராக்கெட் சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாம் ஏவுதளத்தில் இருந்து அதிகாலை 4.04 மணிக்கு ஏவ திட்டமிடப்பட்டு எரிபொருள் நிரப்பும் பணி முடிவடைந்துள்ளது. இந்த பிஎஸ்எல்வி சி41 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட்டவுன் 32 மணி நேர கவுண்ட்டவுன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான 'இஸ்ரோ' கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையிலான வழிகாட்டி செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகிறது. முதற்கட்டமாக 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்து, அவற்றை வெற்றிகரமாக செலுத்தி விண்ணில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ செயற்கைக்கோளில் உள்ள 3 ரூபிடியம் கடிகாரங்களும் செயலிழந்துவிட்டன. அவற்றை சரிசெய்யும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். ஆனால், கடிகாரங்கள் பழைய நிலைக்கு திரும்பாததால், செயற்கைக்கோளில் இருந்து தகவலைப் பெற முடியவில்லை. அதன்பின்னர் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ செயற்கைக்கோளுக்கு மாற்றாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் -1எச் செயற்கைக்கோள் ஏவப்பட்டது. ஆனால், ராக்கெட்டின் முன்பகுதியில் உள்ள வெப்பப் பாதுகாப்புத் தகடு பிரியாததால், அதில் இருந்து செயற்கைக்கோள் வெளியேற முடியவில்லை. எனவே, அந்த திட்டம் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், வழிகாட்டி செயற்கைக்கோள் வரிசையில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கைக்கோள் நாளை மறுநாள் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. 1.4 டன் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி.ராக்கெட் மூலம் அனுப்பி, புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ செயற்கைக்கோளுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த செயற்கைக்கோளில் இருந்து பெறும் தகவல்கள், மீனவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். செயற்கைக்கோளின் சிக்னல் ரிசீவர்கள் ப்ளூடூத் மூலமாக மீனவர்களின் செல்போன்களுடன் இணைக்கப்படும். இதன்மூலம், கடலில் தாங்கள் இருக்கும் பகுதி, வானிலை எச்சரிக்கைகள் மற்றும் சாத்தியமான மீன்பிடி மண்டலங்கள் குறித்த தகவல்களை மீனவர்கள் அறிந்துகொள்ள முடியும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS