ஏழைகளுக்காகவே பணியாற்றுகிறோம் : பிரதமர் மோடி


ஏழைகளின் சம உரிமைக்காகவே தமது தலைமையிலான அரசு பணியாற்றி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அமெரிக்காவின் சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றியதன் 125-ம் ஆண்டை நினைவுக்கூறும் வகையில் கோவை தனியார் பொறியியல் கல்லூரியில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி, சகோதர, சகோதரிகளே வணக்கம் என தமிழில் தமது உரையைத் தொடங்கினார். ஏழைகள் சம உரிமைகளை பெறவும் அவர்களின் தன்னம்பிக்கையை உயர்த்தும் வகையிலும் பல்வேறு நலத்திட்டங்களை தமது அரசு எடுத்துவருவதாக பட்டியலிட்ட பிரதமர் மோடி, அனைவருக்கும் தரமான மருத்துவ வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். 

மேலும் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் மூலம் திறன் வாய்ந்த பணியாளர்கள் உருவாக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், மாணவர்களின் திறன்களை வளர்க்கும் விதமாக நாடு முழுவதும் 5 ஆயிரம் பள்ளிகளில் திறன் வளர்க்கும் ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார். எதிர்கால இந்தியா இளைஞர்களின் கையில் உள்ளது என அன்றே கணித்தவர் சுவாமி விவேகானந்தர் என புகழாரம் சூட்டிய மோடி, இளைஞர்களின் கடின உழைப்பு, தன்னம்பிக்கையின் காரணமாக ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்களை வென்று இந்தியா பெருமை அடைந்துள்ளதாகவும் கூறினார்.

POST COMMENTS VIEW COMMENTS