“மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தாருங்கள்” - குமாரசாமி கோரிக்கை


காவிரி ஆற்றில், புதிதாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக எல்லைப் பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ள அணை மூலம் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றவும், 400 மெகாவாட் மின்உற்பத்தி நிலையத்தை ஏற்படுத்தவும் கர்நாடகா முடிவெடுத்துள்ளது. 

ஏற்கனவே, காவிரியில் உரிய நீரை வழங்க மறுப்பதாக கர்நாடகாவுடன் தமிழகத்துக்கு பிரச்னை உள்ள நிலையில், புதிய அணை கட்ட தமிழகம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி எழுதிய கடிதத்தில், “கர்நாடக அரசின் முடிவு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவதாக அமையும். காவிரி நீர் உற்பத்தியாகும் மாநிலத்தைச் சேர்ந்த அரசு தன்னிச்சையாக செயல்படக் கூடாது. மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகள் குடுமையாக பாதிக்கப்படுவார்கள்” என்று கேட்டுக்கொண்டார். 

               

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி இன்று நேரில் சந்தித்தார். அப்போது, “மேகதாது அணை விவகாரத்தில் தமிழக, கர்நாடக அரசுகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். கால தாமதம் செய்யாமல் மேகதாது அணையை கட்ட மத்திய அரசு ஒத்துழைப்பு தர வேண்டும். தமிழக அரசுடனான அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து வைக்க வேண்டும்”  என பிரதமர் மோடியிடம் குமாரசாமி வலியுறுத்தினார்.   

மேலும் இந்தச் சந்திப்பின் போது, கர்நாடகாவில் சமீபத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புக்கு ரூ1,199 கோடி நிவாரண நிதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

POST COMMENTS VIEW COMMENTS