விஜயபாஸ்கர், டிஜிபியை டிஸ்மிஸ் செய்யாதது ஏன்? - ஸ்டாலின் கேள்வி


குட்கா ஊழல் விவகாரத்தில் லஞ்சம் கொடுத்தவரும் லஞ்சப் பணத்தை கொண்டு போய் சேர்த்த இடைத்தரகரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பணத்தை பெற்றுக் கொண்டவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், குட்கா வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகிய இருவரையும் தமிழக அரசு டிஸ்மிஸ் செய்யாமல் இருப்பதும், அதனை ஆளுநர் கண்டுகொள்ளாமல் இருப்பதும் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். 

ஊழல் வழக்கில் லஞ்சம் பெற்றவர்களை முதலில் கைது செய்வதுதான் வழக்கம் என்றும், ஆனால், குட்கா ஊழலில் லஞ்சம் பெற்றவர்களை பதவியில் நீடிக்க அனுமதித்துவிட்டு, லஞ்சம் கொடுத்தவர், இடைத்தரகர் ஆகியோரை சிபிஐ கைது செய்திருக்கிறது என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ‌ 

குட்கா ஊழல் குறித்து தீவிர நடவடிக்கை எடுத்துவரும் சிபிஐ, அமைச்சரிடமும், டிஜிபியிடமும் நெருங்காமல் தயங்கி நிற்பதேன் எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், லஞ்சம் பெற்றவர்களை கைது செய்து சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை சிபிஐ நிலைநாட்டிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS