ஒன்றரை லட்சம் பேரையும் கட்சியிலிருந்து நீக்குவார்களா? - அழகிரி கேள்வி


அமைதிப் பேரணியில் தனக்கு ஆதரவாக வந்த ஒன்றரை லட்சம் பேரையும் திமுகவில் இருந்து நீக்குவார்களா என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, சென்னையில் பேரணியாகச் சென்று கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதன் பின் பேசிய அழகிரி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே பேரணி நடத்தப்பட்டதாகவும் இதன் பின்னணியில் வேறு எந்த நோக்கமும் இல்லை எனவும் தெரிவித்தார். தனக்கு ஆதரவாக பேரணியில் பங்கேற்ற ஒன்றரை லட்சம் தொண்டர்களை திமுகவில் இருந்து நீக்குவார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 

மு.க.அழகிரியை சென்னை விமான நிலையத்தில் வரவேற்ற சென்னையை சேர்ந்த திமுக நிர்வாகி ரவி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கபட்ட நிலையில் அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

                   

முன்னதாக திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே தொடங்கிய அமைதிப் பேரணி, மெரினாவில் கருணாநிதி நினைவிடம் நோக்கி நடைபெற்றது. பேரணியில் மு.க. அழகிரி உள்ளிட்ட பலர் கருப்புச் சட்டை அணிந்திருந்தனர். அழகிரியின் மகன் துரை தயாநிதி உள்ளிட்டோரும் பேரணியில் பங்கேற்றனர். பேரணியின் போது கைகளில் பதாகைகளுடன் ஊர்வலமாகச் சென்ற அழகிரியின் ஆதரவாளர்கள், முழக்கங்களை எழுப்பினர். பாதுகாப்புக்காக பேரணி நடைபெற்ற பகுதி முழுவதும் காவலர்கள் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS