“என் குடும்பம் எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை” - அமைச்சர் தந்தை அறிக்கை


அரசியல் எதிரிகளால் சில செய்திகள் திட்டமிட்டு திரித்து பரப்பப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 07.04.2017 அன்று தனது வீட்டில் நடந்த வருமான வரிசோதனையில் கணக்கில் வராத பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்றும், இச்சோதனைக்குப் பின் வருமான வரித்துறையினருக்கு தானும் தனது குடும்பத்தினரும் முழு ஒத்துழைப்பை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வருமான வரித்துறையினரின் அனைத்து கேள்விகளுக்கும் முறைப்படி பதிலளித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், ஊடகங்களில் வெளிவருவது போல எவ்வித வாக்குமூலமும் அளிக்கவில்லை என கூறியுள்ளார். தனது குடும்பத்தினர் முறைப்படி வருமான வரியை தொடர்ந்து செலுத்தி வருவதாகவும் அமைச்சர் விஜய பாஸ்கர் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருவதால் மிகுந்த மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் ஆளாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள விஜய பாஸ்கர் தந்தை, தானும் தனது குடும்பத்தினரும் எந்தவித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளார். அரசியல் எதிரிகளால் திட்டமிட்டு உருவாக்கப்படும் சூழ்ச்சிகளை அரசியல் ரீதியாக தானும், தனது குடும்பத்தினரும் எதிர்கொள்வோம் எனவும் சின்னத்தம்பி தெரிவித்துள்ளார். 

POST COMMENTS VIEW COMMENTS