ஸ்டாலின் காலில் விழ வேண்டாம்!: தொண்டர்களுக்கு திமுக வலியுறுத்தல்


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காலில் விழ வேண்டாம் என தொண்டர்களை அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் காலில் விழ எத்தனித்து அவருக்கு மன சங்கடத்தை ஏற்படுவத்துவதை தொண்டர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அவருக்கு வணக்கம் செலுத்தி வாழ்த்து தெரிவிப்பதே, திமுக போற்றி வரும் பண்பாட்டுக்கு பெருமை சேர்க்கும்” என கூறப்பட்டுள்ளது. அதே போல ஸ்டாலினை காண வரும் போது பரிசளிக்க விரும்புவோர், ஆடம்பரம் மிகுந்த சால்வைகள், மாலைகளை தவிர்த்து புத்தகங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும், “அதிகளவு பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும். நிகழ்ச்சி நடக்கும் இடம் நேரம் நாள் இவற்றை தெரிந்து கொள்ள முக்கியமான இடங்களில் மட்டும் பேனர்கள் வைத்தால் போதும்” என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில் திமுக சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

POST COMMENTS VIEW COMMENTS