திமுகவில் இணைகிறாரா நாஞ்சில் சம்பத்..?: நேரடி பதில்


திமுகவில் அழகிரியை சேர்த்தால் திமுக வலுப்பெறும் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் நாஞ்சில் சம்பத் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ‘‘திமுகவின் தேவை தமிழகத்தில் அதிகமாகியுள்ளது. மதவாதத்திற்கு எதிராக திமுக நிச்சயமாக செயல்படும் என்ற நம்பிக்கையில் திமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் சொன்னேனே தவிர எனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்லவில்லை. நான் ஒருபோதும் கட்சி அரசியலில் ஈடுபட மாட்டேன். ஆகையால் திமுகவில் இணையப் போவதில்லை”என்றார்.

மேலும் பேசிய அவர், “ மு.க.அழகிரி குறித்து நான் எதுவும் பேசமுடியாது. பந்து ஸ்டாலின் மைதானத்தில் உள்ளது. அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அழகிரியை சேர்த்தால் திமுக வலுப்பெறும். திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெரும். திருப்பரங்குன்றம் தொகுதியை பொறுத்தவரை நிறுத்தப்படும் வேட்பாளரை பொறுத்து வெற்றி தீர்மானிக்கப்படும். அதிமுகவில் ஒருங்கிணைப்பு இல்லை என்பது மதுசூதனன் விஷயத்தில் தெளிவாக தெரிகிறது” என்றார்.

டிடிவி தினகரன் ஆரம்பித்த ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விலகியிருந்தார். அப்போது, இனிமேல் அரசியலில் அடைபட்டு கிடக்க மாட்டேன் எனவும் இலக்கிய மேடைகளில் தன்னை காணலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

POST COMMENTS VIEW COMMENTS