பிரபாகரன் படம்: கேரளாவில் சீமான் தடுத்து நிறுத்தம்


கேரளாவில் வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கச்சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அம்மாநில காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். 

கனமழை மற்றும் வெள்ளத்தில் கடுமையான பாதிப்புக்கு உள்ளான கேரள மாநிலம் மெல்ல மீண்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று சீமான் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் வெள்ள நிவாரணப் பொருட்கள், கேரளாவின் கோட்டயம் மாவட்டத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டன. வாகனங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் படம் பொறித்த பதாகைகள் இருந்ததால், நிவாரணப் பொருட்களை வழங்க சங்கனாசேரி முகாமில் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. 

இதனால் அங்கு சலசலப்பு எழுந்ததையடுத்து சீமான் மற்றும் உடன் சென்ற ‌நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினரை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். கோட்டயம் காவல்நிலையத்தில் நடந்த பல மணிநேர விசாரணைக்கு பின்னர் சீமான் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையில் முகாம்களில் உள்ளவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க காவல்துறையினர் அனுமதி வழங்கினர். கேரள காவல்துறையினரால் விடுவிக்கப்பட்ட சீமான் தமிழகம் திரும்பினார்.

POST COMMENTS VIEW COMMENTS