ஒரு லட்சம் பேருடன் மாபெரும் அமைதிப் பேரணி - அழகிரி 


மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் ஒரு லட்சம் ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தவுள்ளதாக திமுக முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி உயிரிழந்தார். கருணாநிதி மறைந்து ஒரு வாரம் கூட முழுமையாக முடியாத நிலையில், ஸ்டாலின் தலைமை குறித்து மு.க.அழகிரி காட்டமான விமர்சனத்தை முன் வைத்தார். அழகிரியின் பேச்சு தமிழக அரசியல் வட்டாரங்களில் ஒரு அதிர்வலையை உருவாக்கியுள்ளது. திமுகவின் அவசர செயற்குழு முடிவடைந்து அடுத்து பொதுக் குழு கூட்டம் ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறவுள்ளது. 

                    

ஏற்கனவே தனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்தக் கட்ட முடிவை அறிவிப்பேன் என்று அழகிரி கூறியிருந்தார். அழகிரி என்ன முடிவு எடுக்கப் போகிறார், திமுகவில் அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தற்போது அரசியல் வட்டாரங்களில் உள்ளன.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தவுள்ளதாக அழகிரி கூறியுள்ளார். வருகின்ற செப்டம்பர் 5ம் தேதி சென்னை அண்ணாசாலை முதல் கருணாநிதி நினைவிடம் வரை இந்தப் பேரணியை நடத்தவுள்ளார். 

பேரணி தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அழகிரி, “சென்னையில் நடைபெறும் பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள். அண்ணாசாலையில் இருந்து அமைதிப் பேரணியை தொடங்க போலீசாரிடம் அனுமதி கோரியுள்ளோம். ஆனால், திருவல்லிக்கேனி காவல்நிலையம் முதல் அனுமதி அளிக்க போலீஸ் தரப்பில் ஆலோசனை செய்து வருகிறார்கள்.

தற்போதைக்கு திமுகவில் என்னை சேர்ப்பதாக தெரியவில்லை. நேரம் வரும் போது எனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவேன். செப்டம்பர் 5ம் தேதி பேரணிக்கு பிறகு அடுத்தக்கட்ட முடிவை அறிவிப்பேன்” என்றார்.

POST COMMENTS VIEW COMMENTS