திமுக பொருளாளர் பதவிக்கு துரைமுருகன், ஆ.ராசா போட்டி?


வரும் 28-ஆம் தேதி நடைபெறும் திமுக பொருளாளர் பதவிக்கான தேர்தலில், துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, எ.வ.வேலு ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.

திமுக பொருளாளர் பதவியை கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் தற்போது கட்சியின் செயல் தலைவராக உள்ள மு.க. ஸ்டாலினே வகித்து வருகிறார். அதற்கு முன் ஆற்காடு வீராசாமி அப்பதவியில் இருந்தார். திமுகவில் ஒருவர் இரு பதவிகளை வகிக்கக் கூடாது என்று விதி உள்ளது. அதனால், பொருளாளர் பதவிக்கு வேறு ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

இந்நிலையில் திமுக பொருளாளர் பதவிக்கு தற்போது கட்சியின் முதன்மைச் செயலாளராக உள்ள துரைமுருகன், முன்னாள் எம்பி டி.ஆர்.பாலு, கொள்கை பரப்புச் செயலாளராக உள்ள ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் முன்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்களில் ஒருவரே கட்சியின் பொருளாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை துரைமுருகன் கட்சியின் பொருளாளராகத் தேர்வு செய்யப்பட்டால், அவர் தற்போது வகித்து வரும் முதன்மைச் செயலாளர் பதவிக்கு வேறு ஒருவர் தேர்வு செய்யப்படுவார். கடந்த பல ஆண்டுகளாக திமுகவின் தலைவர், பொருளாளர் பதவி வகிப்பவர்கள் ஒருமனதாகவே தேர்வு செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

POST COMMENTS VIEW COMMENTS