கனிமொழிக்கு பதவியை கொடுங்கள் என்றுதான் சொன்னேன் - மு.க.அழகிரி


திமுக தலைவர் கருணாநிதி மறைந்து ஒரு வாரம் ஆன நிலையில், ஸ்டாலின் தலைமை குறித்து மு.க.அழகிரி இன்று காட்டமான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். திமுகவினர் சிலர் ரஜினியுடன் தொடர்பில் இருப்பதாகவும், பணத்திற்காக விலை போனார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார். அழகிரியின் இன்றைய பேச்சு தமிழக அரசியல் வட்டாரங்களில் ஒரு அதிர்வலையை உருவாக்கியுள்ளது. அழகிரி கட்சியில் இல்லை என்பதால் அவரது பேட்டி குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நியூஸ் மினிட்க்கு அழகிரி அளித்த பேட்டியில், “தமிழகம் முழுவதும் உள்ள எனது ஆதரவாளர்களுடன் மதுரையில் ஆலோசனை நடத்தி பின்னர் அடுத்தக்கட்ட முடிவை எடுப்பேன். கடந்த மூன்று ஆண்டுகளாக தேர்தலில் திமுக பெற்ற தோல்விகள் குறித்து அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். அதேபோல், எதிர்க்கால திட்டம் குறித்தும் ஆலோசனை செய்யப்படும்.

                   

நான் ஒரு தலைவராக ஆக வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருந்ததில்லை. கலைஞர் இருந்த போது, அவர் தான் எம்.பி பதவி கொடுத்தார். வேண்டாம் என்றுதான் அவரிடம் கூறினேன். பின்னர், அமைச்சர் பதவி கொடுத்தார். அப்போதும் வேண்டாம் என்றேன். கனிமொழிக்கு கொடுங்கள் என்று தான் சொன்னேன். தென்மண்டல பொறுப்பாளர் பதவியையும் பேராசிரியர் அன்பழகனும், கலைஞரும் தான் கொடுத்தார்கள். என்னை ஏற்றுக் கொள்ளுமாறும் கூறினர். திருமங்கலம் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் அந்த பதவியை கொடுத்தார்கள். நான் எதனையும் கேட்கவில்லை. மதுரை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் எனக்கு ஆதரவாளர்கள் உள்ளனர்” என்றார்.

               

காவேரி மருத்துவமனையில் அழகிரியுடன் ரஜினி சந்தித்த புகைப்படம் வெளியாகி ஒரு அரசியல் யூகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ரஜினியுடன் இணையப் போவதாக வெளியான தகவல்களுக்கு அழகிரி மறுப்பு தெரிவித்தார். 

Courtesy - The News Minute

POST COMMENTS VIEW COMMENTS