“திமுகவினர் பலர் ரஜினியுடன் தொடர்பில் இருக்கிறார்கள்” - அழகிரி ‘மூவ்’ 


திமுக தலைவர் மறைந்து முழுமையாக ஒரு வாரம் கூட முடியவில்லை. ஆனால், திமுகவின் தற்போதையை நிலை குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி பேசியுள்ள கருத்துக்கள் புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. திமுகவில் தனக்கான இடம் என்பது குறித்து மட்டும் அழகிரி பேசியிருந்தால் கூட அது சிறிய சர்ச்சையாக முடிந்திருக்கும். ஆனால், திமுகவில் உள்ளவர்கள் பணத்திற்கு விலை போகிறார்கள் என்னும் அளவிற்கு காட்டமாக அவர் பேசியுள்ளார்.

டைம்ஸ் நவ்-க்கு அழகிரி அளித்த பேட்டியில், “திமுகவில் உள்ள பலர் ரஜினியிடம் பேசி வருகிறார்கள். பொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி அழிக்கப்பட்டுவிடும். பணத்திற்காக விலை போகின்றவர்களை தலைவர் தண்டிப்பார், அவருடைய ஆன்மா அவர்களை தண்டிக்கும். கட்சி சரியாக செயல்பட்டுக் கொண்டிருந்தால், ஆர்.கே.நகர் தேர்தலில் எப்படி டெபாசிட் இழந்திருக்க முடியும்? அவர்கள் பணத்தை பெற்றுக் கொண்டு தேர்தலில் தோற்றார்கள் என சில தலைவர்கள் கூறினர்” என்று கூறியுள்ளார்.

 

மேலும், “கட்சிக்குள் நான் வருவதை ஸ்டாலினும் மற்ற தலைவர்களும் விரும்பவில்லை. நான் வலிமையான தலைவராக உருவாகிவிடுவேனோ என்று அவர்கள் பயப்படுகிறார்கள். திமுக கட்சிப் பதவிகள் விற்கப்படுகின்றன. நான் இதுவரை எந்த முடியும் எடுக்கவில்லை. அடுத்த ஆறு மாதத்தில் நான் விரும்புவதையே கட்சி தொண்டர்கள் செய்வார்கள். கட்சியின் தற்போதையை தலைமை கட்சியை அழித்துவிடும்” என்று சரவெடியாக வெடித்துவிட்டார்.

இதனிடையே, மெரினாவில் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, “கருணாநிதியின் அனைத்து விசுவாசிகளும் தன் பக்கமே உள்ளனர். காலம்தான் இதற்கு பதில் சொல்லும். தந்தையிடம் கட்சி தொடர்பான தன் ஆதங்கத்தை தெரிவித்து இருக்கிறேன். கட்சி ரீதியான ஆதங்கம் என்ன என்பதை இரண்டு அல்லது மூன்று நாட்களில் சொல்கிறேன்” என்று கூறினார். 

                             

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து நாளை (ஆக.14) அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அதேபோல், திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் வரவுள்ளது. அதனை தொடர்ந்து மக்களவை தேர்தலும் அடுத்த வருடம் வரவுள்ளது. இத்தகையை நிலையில் அழகிரியின் இந்தப் பேச்சு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 

POST COMMENTS VIEW COMMENTS