''பா.ஜ.க.வுக்கான ஆதரவுத்தளம் விரிந்து கொண்டிருக்கிறது''- நரேந்திர மோடி


தமிழகத்தில் பாரதிய ஜனதாவுக்கான ஆதரவுத்தளம் பரந்து விரிந்து கொண்டிருக்கிறது என்று, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தினத்தந்தி நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு தேர்தல் வெற்றி வாய்ப்புகள் எப்படியிருக்கும் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள பிரதமர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடனோ, அ.தி.மு.க.வுடனோ கூட்டணி வைக்காமல் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் இது சாதாரண சாதனை அல்ல என்று சுட்டிக்காட்டியுள்ள மோடி, பா.ஜ.க.வுக்கு என்று பாரம்பரியமாக ஆதரவு அளிக்கும் சில பகுதிகள் உண்டு என்றும் கூறியுள்ளார். 

இப்போது அந்த ஆதரவுத்தளம் பரந்து விரிந்து கொண்டிருப்பதாகவும், கடுமையாக உழைத்தால் நிச்சயமாக நல்ல வெற்றிகளை காண முடியும் என்று நம்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழக தேர்தல்களில் கடந்த பல ஆண்டுகளாக யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் மிகக்குறைவான தேர்வுகளே இருப்பதால், தமிழக மக்கள் குறிப்பாக இளைஞர்கள் இப்போது மாற்று தேர்வை தேடிக்கொண்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. அரசு ஊழலுக்கு எதிராக போராடுவதில் உறுதி பூண்டிருக்கிறது என்றும், இதை மிகவும் உரத்த குரலில் தெளிவாக சொல்ல விரும்புகிறேன் என்றும் மோடி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது குறித்து பதில் அளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் பலனடையும் நல்ல திட்டங்கள் பற்றி வேண்டுமென்றே அப்பாவி மக்கள் மனதில் அச்சத்தை உருவாக்கும் முயற்சியில் பயங்கரவாத சக்திகளின் தலையீடு இருப்பதற்கு சான்றுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மாநில வளர்ச்சிக்கான திட்டங்கள், சில குறிப்பிட்ட நோக்கம் கொண்டவர்களால் இடையூறு செய்யப்படுகின்றன என்பதை சமீபத்தில் நடந்த பல சம்பவங்களில் பார்த்திருக்கிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால், அந்த கட்சியோடு பா.ஜ.க. கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு, யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

POST COMMENTS VIEW COMMENTS