சாதி ரீதியிலான இடஒதுக்கீடு தொடரும் - பிரதமர் மோடி


அம்பேத்கரின் கனவு நிறைவேறும் வரை சாதி ரீதியிலான இடஒதுக்கீடு தொடரும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஊடகங்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், 2014ஆம் ஆண்டு தேர்தலில் கைப்பற்றிய இடங்களை விட அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேர்தலில் அதிக தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெறும் என்று கூறியுள்ளார். 

மக்கள் வலிமையான, தீர்க்கமான அரசையே விரும்புவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். சுயலாபத்திற்காக பாரதிய ஜனதாவை வீழ்த்த மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டிருப்பதாகவும் விமர்சித்துள்ளார். மக்களைப் பற்றி சிந்திக்காமல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அதுபோன்ற கூட்டணிக்கு முயற்சிக்கப்படுவதாக கூறிய பிரதமர் மோடி, அது குடும்ப அரசியலையே முன்னிறுத்துவதாகவும் சாடினார். 

அம்பேத்கரின் கனவுகள் நிறைவேறும் வரை சாதிரீதியிலான இடஒதுக்கீடு தொடரும் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்தார். அதில் எந்தவித சந்தேகமும் தேவையில்லை என்று சுட்டிக்காட்டினார். 

ரபேஃல் ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த மோடி, அது இரு அரசுகளிடையே நேர்மையுடன் நடந்த ஒப்பந்தம் என்று விளக்கமளித்திருக்கிறார். 2017 செப்டெம்பர் முதல் இந்தாண்டு ஏப்ரல் வரை 45 லட்சத்திற்கும் மேலான வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். 

வளர்ச்சிக்கான நடவடிக்கையில் பெண்களுக்கு சம உரிமை அளிக்கவில்லை என்றால் எந்த‌வொரு நாடும் முன்னேற முடியாது என்று கூறியுள்ளார். மக்களின் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தலைமறைவாகும் குற்றவாளிகளுக்கு எதிராக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS