'ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா வழங்குக'- எம்பி மைத்ரேயன்


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்த கோரிக்கை தொடர்பாக மத்திய அரசின் பதிலைப் பெற அதிமுகவினரும் தமிழக மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக அதிமுக எம்பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா வழங்க வலியுறுத்தி அமைச்சரவை மற்றும் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பாக மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அதிமுக எம்பிக்கள் வலியுறுத்தியதை குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா மறைந்து 600 நாட்கள் கடந்த நிலையில், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பதிலைப் பெற அதிமுகவினரும் தமிழக மக்களும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக மைத்ரேயன் கூறியுள்ளார்.

இந்நிலையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசியல் தலைவர்களிலேயே எழுத்தாற்றலும், சொல்லாற்றலும் ஒருங்கே பெற்றிருந்தவர் கருணாநிதி என புகழ்ந்துள்ளார். இந்தியாவில் தென்னகத்து ஒளிவிளக்காக ஏழு கோடி தமிழர்களின் நெஞ்சில் மட்டுமல்ல, மாநில எல்லைகளைக் கடந்து நாட்டு மக்கள் அனைவரது பேரன்புக்கும், போற்றுதலுக்கும் உரிய தலைவர் கருணாநிதி‌ என சுட்டிக்காட்டியுள்ள வைகோ, பாரத ரத்னா விருது வழங்கி கருணாநிதியை சிறப்பிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS