ராகுல் பாதுகாப்பு குறித்து காவல்துறை விளக்கம்


கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரவிருந்தது குறித்த தகவல்கள் முன்கூட்டியே காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கவில்லை என்று காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கடந்த எட்டாம் தேதி ராகுல் காந்தி வந்தார். அப்போது அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து தமிழக காவல்துறையினரிடம் கேட்டபோது, சென்னை விமான நிலையத்திற்கு பகல் 12.45 மணிக்கு வந்து, அங்கிருந்து ஒரு மணிக்கு புறப்பட்டு 1.15 மணிக்கு ராயல் லீ மெரீடியன் ஹோட்டலில் தங்குவதாக இருந்ததாக தெரிவித்தனர். ஆனால், ஹோட்டலுக்கு திட்டமிட்டதற்கு 11 நிமிடங்கள் முன்னதாகவே வந்துவிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். 

பின்னர் ஹோட்டலில் இருந்து 2.50 மணிக்கு புறப்பட்டு 3.15 மணிக்கு கருணாநிதி உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி மண்டபத்திற்கு வருவதாக இருந்ததாக காவல்துறையினர் கூறினர். ஆனால், திட்டமிட்டதற்கு முன்கூட்டியே அதாவது 2.50 மணிக்கு பதிலாக 1.42 மணிக்கே புறப்பட்டு, 2.05 மணிக்கெல்லாம் ராஜாஜி மண்டபத்திற்கு ராகுல் காந்தி வந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ராகுல் காந்தியின் மாற்றியமைக்கப்பட்ட பயணத் திட்டம் குறித்து தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் முன்கூட்டியே தெரிவித்திருந்தால் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்கமுடியும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS