குடும்ப அரசியல் என சொல்லி விடுவார்கள் : தம்பி மகனை தவிர்த்த வைகோ


நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அதன் ஒரு பகுதியாக கேரளா சென்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார். மேலும் காங்கிரசை சேர்ந்த அம்மாநில எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலாவையும் சந்தித்தார். இருவரிடமும் தேனி பொட்டிபுரத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த கேரள அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்

கேரள எதிர்கட்சி தலைவரை சந்திக்க செல்லும் போது வைகோவின் தம்பி மகனும் அவரோடு சென்றிருந்தார். ரமேஷ் சென்னிதலா வந்ததும் அவருக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்த வைகோ, பொன்னாடை போர்த்தினார். புகைப்படம் எடுத்துக் கொள்வோம் என்ற சென்னிதலா தெரிவித்ததும் போஸ் கொடுக்க போனார் வைகோ. அப்போது அவரது தம்பி மகனும் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க வந்ததை கண்டதும் , நீ தள்ளிப் போ, வர வேண்டாம் என கண்டித்து விட்டார். 

சென்னிதலாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் அவரை வேண்டாம் என்று கூறினீர்கள், அவரும் நம்மோடு வந்து நிற்கலாமே என வைகோவிடம் கேட்க, அவர் என் தம்பி மகன், என்னோடு புகைப்படத்தில் நின்றால் நான் குடும்ப அரசியல் செய்கிறேன் என்று சொல்லிவிடுவார்கள், அவர் வேண்டாமே என்றார்.  

POST COMMENTS VIEW COMMENTS