‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’ - சென்னை திரும்பிய ஓபிஎஸ் பேட்டி


எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஓபிஎஸ் தனது ஆதரவாளர்கள் கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் மற்றும் மைத்ரேயன் ஆகியோருடன் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி சென்ற ஓபிஎஸ் இன்று மதியம் 2.45 மணியளவில்  நிர்மலா சீதாராமனை சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.

டெல்லி பயணம் குறித்து ஓபிஎஸ் கூறுகையில், ‘டெல்லிக்கு வந்தது அரசியல் பயணமோ அல்லது அரசு சார்ந்த பயணமோ இல்லை. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திப்பது மரியாதை நிமித்தமானது’ என்று கூறியிருந்தார். மேலும், தனது சகோதரர் சிகிச்சைக்கு ராணுவ விமானத்தை ஏற்பாடு செய்து தந்த நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவிக்க வந்ததாக அவர் கூறினார்.

பின்னர், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் டெல்லியில் உள்ள நிர்மலா சீதாராமன் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் பன்னீர்செல்வம், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தாக செய்தி வெளியானது. 

      

ஒபிஎஸ்-சந்திப்பு தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், நிர்மலா சீதாராமன் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் முதலில் ஒரு விளக்கம் அளிக்கப்பட்டது. ‘தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்கவில்லை என்றும் மைத்ரேயன் எம்பியை மட்டுமே சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது’ என  அதில் குறிப்பிட்டிருந்தது.

ஓபிஎஸ்-ஐ நிர்மலா சீதாராமனை சந்திக்க மறுத்ததாக ஊடகங்களில் தொடர்ச்சியாக செய்திகள் வெளியான நிலையில், மீண்டுமொருமுறை நிர்மலா சீதாராமன் அலுவலகம் சார்பில் பன்னீர்செல்வத்தை அமைச்சர் சந்திக்கவில்லை என மீண்டும் விளக்கம் கொடுக்கப்பட்டது. 

                

இந்நிலையில், டெல்லியில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் சென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நிர்மலா சீதாராமனை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என அண்ணா சொல்லியிருக்கிறார்’ என்று பதில் மட்டும் அளித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS