“மோடி அரசுக்கு பாதகம் இல்லாமல் பார்த்துக்கொள்வது எங்களது நோக்கம்” - செல்லூர் ராஜூ


நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக ஆதரவு அளிக்காவிட்டாலும் பா.ஜ.க வெற்றி பெற்றிருக்கும் என அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார். 

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் ஆழ்துளை குடிநீர்குழாய் சேதமடைந்ததை ஆய்வு மேற்கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ புதியதலைமுறைக்கு அளித்த பேட்டியில் “நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு அ.தி.மு.க ஆதரவு அளிக்காவிட்டாலும் பா.ஜ.க வெற்றி பெற்று இருக்கும். ஏனெனில் பாராளுமன்றத்தில் மிருக பலத்துடன் பா.ஜ.க உள்ளது. அமித்ஷா ஆதரவு கேட்டு கொண்டதற்கு இணங்க தமிழக முதல்வர் மற்றும் துணை  முதல்வர் கலந்து ஆலோசித்து மாநிலத்தின் நலன் கருதி ஆதரவு அளித்துள்ளனர். தமிழக அமைச்சர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அமைச்சர்கள் உரிய நடவடிக்கை எடுக்க மோடி உத்தரவிட்டுள்ளார். இதனால் மோடி அரசு பாதகம் ஏற்படாமல் பார்த்துகொள்வது எங்களது நோக்கம். அதற்காக மாநிலத்தின் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டோம். கோரிக்கையை முன் வைப்பது எங்களது கடமை என்றார். 

மேலும் பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி, மோடி அவர்களை கட்டிப்பிடித்தது அரசியல் சாணக்கியமா, நகைச்சுவையா ஆசிர்வாதம் வாங்கினாரா என்பது போகப் போகத்தான் தெரியும். இதனை சபாநாயகரும் கண்டித்துள்ளார். சபை நாகரிகம் இல்லாமல் செயல்படக் கூடாது என கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் கூட்டணிக் குறித்து முதல்வர், துணை முதல்வர் முடிவு எடுப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

மேட்டூர் அணை தூர்வாரியது போல், வைகை அணை அடுத்தாண்டு தூர்வாரப்படும். 75 கோடி மதிப்பில் வைகை ஆற்றில் கலக்கும் கழிவு நீரை மறுசுழற்றி செய்யும் பணி நடைபெற உள்ளது. வைகைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை மணல் கொள்ளையர்களிடம் லஞ்சம் வாங்கும் புகார் எழுந்துள்ளது. இது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது. சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது மாநகர காவல் ஆணையர் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளார். முதல்வரின் கீழ் காவல்துறை வருவதால் எதிர்காலத்தில் யாரும் தவறு செய்யாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

POST COMMENTS VIEW COMMENTS