"திருநாவுக்கரசர் செயல்பாட்டில் திருப்தி இல்லை" - கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு


காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசரின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என, அக்கட்சியின் தென்சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னை அடையாறில் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் சிவாஜி சிலைக்கு அஞ்சலி செலுத்திய கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசினார்.  அப்போது சிவாஜி கணேசன் அரசியலில் தோல்வி அடைந்ததாக கூறுவது தவறு. அரசியலில் வெற்றி, தோல்வி என்பது இருக்கத்தான் செய்யும். மீண்டும் அரசியலில் சிவாஜி வந்திருந்தால் கண்டிப்பாக வெற்றி பெற்றியிருப்பார். 

மேலும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ள திருநாவுக்கரசர், தம்மைத் தாமே முதல்வர் வேட்பாளர் என கூறிக் கொள்வதாக குற்றம்சாட்டியுள்ளார். எல்லோரையும் அரவணைத்து செல்லும் தலைவராக மாநில தலைவர் இருக்க வேண்டும் எனக்கூறிய தியாகராஜன், தம்மை திருநாவுக்கரசர் மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். திருநாவுக்கரசரின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராவதற்கு எனக்கும் தகுதி இருக்கிறது, திறமை இருக்கிறது. எல்லோரையும் அரவணைத்துதான் தலைவர் செல்லவேண்டும். இது குறித்து கேட்டால் நான்தான் பதவி கொடுத்தேன் என திருநாவுக்கரசர் சொல்கிறார், மிரட்டுகிறார். தமிழகத்தில் உள்ள மூன்றாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களை வலுவாக வழிநடத்தி செல்ல வேண்டும். கூட்டு பொறுப்புடன் செயல்பட வேண்டும். எங்களுக்கு உரிய அங்கீகாரம் வேண்டும், திருநாவுக்கரசர் இன்னும் திராவிட கலாச்சாரத்தில் இருந்து தேசிய கலாச்சாரத்திற்கு வரவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார். 


 

POST COMMENTS VIEW COMMENTS