காமராஜரை போல அரசியல் தலைவர்கள் உருவாக வேண்டும்: ரஜினிகாந்த்


காமராஜரை போல், எளிமையும், நேர்மையும் கொண்ட அரசியல் தலைவர்கள் தமிழகத்தில் உருவாக வேண்டும் என்றும் ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “காமராஜர் போன்று தலைசிறந்த அரசியல்வாதி தமிழகத்தில் மீண்டும் உருவாக வேண்டும் என்பது எல்லோருடைய ஆசை. என்னுடைய ஆசையும் கூட. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தின் கல்வி வளர்ச்சி சிறப்பாகவே உள்ளது. ஆனால் இன்னும் சிறப்பாக வேண்டும். எனக்கு தெரிந்தவரை செங்கோட்டையன் தன்னுடைய பணியை சிறப்பாகவே செய்து வருகிறார்.

தமிழருவி மணியன் என்னுடன் இணைவதாக இருந்தால் உண்மையிலே மகிழ்ச்சிதான். அதற்கு என்னுடைய நன்றியும் கூட. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. அந்த நேரத்தில் போட்டியிடுவதா..? இல்லையா..? என்பதை முடிவு செய்வேன். ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் நன்றாக இருக்கும். அதன்மூலம் பணம், நேரம் மிச்சமாகும். எனவே அதனை வரவேற்கிறேன். மற்ற கட்சிகளும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கினால் மிக சிறந்தது.

லோக் ஆயுக்தா சட்டத்தை வரவேற்கிறேன். சக்தி வாய்ந்த லோக் ஆயுக்தாவாக அது இயங்க வேண்டும். பெரிய திட்டங்கள் வந்தால் தான் நாடு முன்னேறும். தொழில், வேலைவாய்ப்புகள் உருவாகும். ஆனால் அப்படி உருவாகும்போது, சிலபேருக்கு இழப்பு நேரிடும். அப்படிப்பட்டவர்களுக்கு அவர்கள் மனது சந்தோஷப்படும்படி நிலம், பணம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். முடிந்தவரை விவசாயிகள் நிலத்தை பாதிக்காத வகையில், 8 வழிச்சாலை அமைக்கப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்” என்றார்.

POST COMMENTS VIEW COMMENTS