கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு


திமுக சார்பில் ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெறும் மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி தத்துவ மாநாட்டில் கலந்துகொள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், திமுக சார்பில் ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெறும் மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி தத்துவ மாநாட்டில் கலந்துகொள்ள வருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அரசியலமைப்பு முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு நாட்டின் கூட்டாட்சி ‌முறையை அனைவரும் ஒன்றிணைந்து உறுதி செய்யும் நோக்கத்தில், அழைப்பு விடுத்துள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கூட்டாட்சி ‌மீது பா‌ரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் நிர்வாகிகள் திட்டமி‌ட்டு கடுமையான தாக்குதல் நடத்தி வ‌ருவதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், பாஜக‌ ‌ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் மத்திய அரசு மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகளே அதற்கு சான்று என தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்‌க‌ம், ஜம்மு காஷ்மீர், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் கூட்டாட்சி தொடர்பான தங்களது பிரச்னைகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன என்றும், மாநில சுயாட்சி உரிமை தொடர்ந்து பறிக்கப்படுவதால், மாநிலங்கள் அரசியலமைப்பு நெருக்கடிக்கு தள்ளப்‌பட்டுள்ளதாக ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஒத்த கொள்கை உடைய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால், கூட்டாட்சி முறையை பாதுகாக்க முடியும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

POST COMMENTS VIEW COMMENTS