குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை ? பாஜக அமைச்சர் மீது சர்ச்சை


இறைச்சி வியாபாரியை அடித்துக் கொன்ற விவகாரத்தில் ஜாமினில் வெளிவந்த குற்றவாளிகளுக்கு மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா மாலை அணிவித்து மரியாதை செய்த விவகாரம் ஜார்க்கண்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்காரில் உள்ள ஹாசாரிபாக் பகுதியில் கடந்த வருடம் ஜூன் 27-ம் தேதி அல்முதீன் அன்சாரி என்ற இறைச்சி வியாபாரி பட்டப்பகலில் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். பசு பாதுகாப்பு என்ற பெயரில் குண்டர்கள் நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் பாஜக தலைவர் ஒருவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிறப்பு நீதிமன்றம் 11 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்து ஆயுள் தண்டனை விதித்தது. 

பின்னர், சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் 8 பேரின் ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. முதல்கட்டமாக உள்ளூர் பாஜக தலைவர் நித்யானந்த் மஹ்தோ கடந்த மாதம் சிறையில் இருந்து வெளியே வந்தார். அதன்பிறகு கடந்த வாரம் 7 பேர் ஜாமீனில் வெளியே வந்தனர். 

ஜாமீனில் வெளிவந்துள்ள குற்றவாளிகளுக்கு மத்திய அமைச்சராக உள்ள பா.ஜனதா எம்.பி. ஜெயந்த் சின்ஹா மாலை அணிவித்து மரியாதையை செலுத்தியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவருக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கட்ட விளக்கங்களை அளித்துள்ளார். அதில், ‘எனக்கு நீதி அமைப்பின் மீது நம்பிக்கை உள்ளது, அதேபோல் சட்டத்தின் மீதும் ஆட்சியின் மீதும் நம்பிக்கை உள்ளது. ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தால் தண்டனையின் பிடியில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’என்றார்.

POST COMMENTS VIEW COMMENTS