”ஒரே நேரத்தில் தேர்தல்” - மத்திய அரசின் திட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு 


நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாளை டெல்லியில் உள்ள சட்ட ஆணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அதிமுக சார்பில் மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை மற்றும் சட்ட அமைச்சர் சிவி சண்முகம் கலந்து கொள்ள உள்ளனர். மத்திய அரசின் முயற்சிக்கு ஏற்கனவே ஆதரவும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. குறிப்பாக ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் தற்போது தேர்வு செய்யப்பட்ட  பல மாநில சட்டமன்றங்களின் ஆயுட்காலத்தை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பது பலரது வாதம். செலவு குறைவதோடு , முறைப்படுத்த முடியும் என்பது மத்திய அரசின் வாதம்.

சட்ட ஆணைய கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக அதிமுக சார்பில் முதலமைச்சர் பழனிசாமியும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வமும் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் “ நிலையான ஆட்சியை தருவதற்காக தமிழக மக்கள் எங்களுக்கு 2016-ல் வாய்ப்பு கொடுத்தனர். பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்துள்ள நிலையில் அவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். இன்னும் பலவற்றை நிறைவேற்ற வேண்டிய கடமை உள்ளது. சட்டமன்றத்தின் ஆயுட்காலம் என்பது 2021 வரை உள்ளது"  என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் அந்த கடிதத்தில் ”இத்தகைய சூழலில் 2019 நாடாளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டமன்றம் உள்ளிட்ட தேர்தல்களையும் இணைத்து நடத்துவதால் சட்டசபையின் ஆயுட்காலத்தை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் ; அதனை ஏற்க முடியாது “ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் இந்த கடிதம் ஜூன் 29-ல் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டே தேர்தலை இணைத்து நடத்துவது என்பது இயலாத ஒன்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்து விட்டது. உரிய சட்டத்திருத்தம், தேவையான நிதி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இல்லாமல் தேர்தலை நடத்துவது என்பது சற்றுக் கடினம் என்பது தேர்தல் ஆணையத்தின் பதிலாகவும் இருக்கிறது. 

POST COMMENTS VIEW COMMENTS