யார் பிரதமர் வேட்பாளர் ? சொல்கிறார் சரத் பவார்


மக்களவை மற்றும் மகாராஷ்ட்ர சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்திருக்கின்றன.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வராமல் தடுக்க, பல்வேறு மாநிலக் கட்சிகளுடன் கைகோர்க்க காங்கிரஸ் வியூகம் அமைத்து வருகிறது. இந்நிலையில், காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று புதிய தேசியக் கட்சியைத் தொடங்கிய முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவாரின் தேசியவாத மக்கள் கட்சி, காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளது. மக்களவை மற்றும் மகாராஷ்ட்ர சட்டப்பேரவைத் தேர்தலில் இருகட்சிகளும் போட்டியிடும் தொகுதிப் பங்கீடு இன்னும் ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும் என்று சரத்பவார் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ், பாஜ கூட்டணிக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு போன்றவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பேசிய சரத்பவார் காங்கிரஸ், பாஜ கட்சிகளின் கூட்டணிக்கு மாற்றாக பிற கட்சிகளின் பெரும் கூட்டணி சாத்தியமற்றதாகும். மாநில கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டணி அமைப்பது சாத்தியம் இல்லாதது என்றும் தெரிவித்துள்ளார்.


மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார் என்பதை இப்போது உறுதியாக கூற முடியாது. 1977 ல் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு, வெற்றி பெற்ற மொரார்ஜி தேசாய் போலவே, இந்த நேரத்திலும் அதே போல் முன்னிறுத்தப்பட வாய்ப்பிருக்கிறது, காரணம் அதே அரசியல் சூழல்தான் இப்போதும் நிலவி வருகிறது என்று சரத்பவார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் போது ஆட்சியில் இருகட்சிகளும் கூட்டணியில் இருந்த நிலையில், மகாராஷ்ட்ர சட்டப்பேரவைத் தேர்தலில் இருகட்சிகளும் தனித்துப் போட்டியிட்டன. ஆனால் அதில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

POST COMMENTS VIEW COMMENTS