சுவிஸ் வங்கியில் இருப்பது வொயிட் என்றால், கருப்பு பணம் எங்கே? - காங். கேள்வி


சுவிட்சர்லாந்தில் உள்ள நேஷனல் வங்கி இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் டெபாசிட் செய்துள்ள பணம் குறித்தான தகவல்களை சமீபத்தில்  வெளியிட்டது. அதில், இந்தியர்களின் பணம் சுமார் 7000 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது கடந்த 2016-ம் ஆண்டை காட்டிலும் 50 சதவீதம் அதிகமாகும். இந்த தகவல் வெளியானதை அடுத்து, 2014 மக்களவை தேர்தலின் போது பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியை சுட்டிக் காட்டி கருப்புப் பணம் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், “2019 நிதியாண்டு இறுதிக்குள் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு முறைகேடாக பணம் அனுப்பியவர்கள், வங்கியில் பணம் பதுக்கியவர்கள் பட்டியலை பெற்றுவிடுவோம்” என கூறினார். அதோடு, சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யப்பட்ட பணத்தை கருப்புப் பணமாகவோ, சட்டவிரோத பரிவர்த்தனையாக ஏன் கருத வேண்டும்? என்று கேள்வி எழுப்பினர். 

இந்நிலையில், சுவிஸ் வங்கியில் இருப்பது வெள்ளை பணம் என்றால், கருப்புப் பணம் எங்கே இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

சுர்ஜிவாலா தனது ட்விட்டர் பக்கத்தில், “டியர் மோடி ஜி..., இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தெரியும் கருப்புப் பணம் எங்கே இருக்கிறது என்று. அது சுவிஸ் வங்கியில் தான் உள்ளது என்று 2013-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி நீங்கள் கூறினீர்கள்.

2018 ஜூன் 29-ம் தேதி உங்கள் நிதியமைச்சர் சுவிஸ் வங்கியில் உள்ளது கருப்புப் பணம் என்று சொல்வது முட்டாள் தனமானது என்கிறார்.

இந்த இரண்டு கருத்துக்களில் எது முட்டாள்தனமானது. சுவிஸ் வங்கியில் உள்ளது வொயிட் பணம் என்றால், கருப்புப் பணம் எங்கே?” என்று கேள்வி எழுப்பினார். 

       

POST COMMENTS VIEW COMMENTS