தொடங்கியது தேர்தல் ஜூரம் ! கூட்டணி தேடும் காங்கிரஸ் !


அரசியல் அரங்கில் காலங்களுக்கு ஏற்ப யூகங்களும் மாறும். இந்த மாற்றங்களை எளிதில் ஏற்றுக்கொண்டு வெற்றிக்கான படிகளை எளிதில் எட்டிப்பிடிப்பதில் கில்லாடிகள் அரசியல் கட்சிகள். இப்போது இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் என்கிற ஒரே நேர்கோட்டில் பயணித்து வருகின்றன. இதில் மாநிலக் கட்சிகளைவிட தேசியக் கட்சிகள் பிரதம நாற்காலியை குறிவைத்து படிப்படியாக தங்களது அரசியல் சதுரங்க காய்களை மிக கவனமாக நகர்த்தி வருகின்றன.

 

தேசியக் கட்சியான காங்கிரஸ் 2019 ஆம் ஆண்டுக்கான தேர்தலை சந்திக்க பல்வேறு ஆலோசனைகளையும், யூகங்களையும் வகுத்து வருகிறது. பாஜகவை வீழ்த்த தேசியளவில் மெகா கூட்டணியில் காங்கிரஸ் ஈடுபடும் என்ற தகவல்கள் வெளியாகின. இப்போது நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக தலைமையிலான மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது. எனவே, 2019 தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப்பெற வேண்டும் என்றால் நாடு முழுவதும் இருக்கும் பல்வேறு மாநிலக் கட்சிகளையும் இணைத்து தேசியளவில் ஒரு மெகா கூட்டணியில் இறங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால், காங்கிரஸின் திட்டம் இப்போது வேறுமாதிரியாக உள்ளது என அண்மையில் அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சூரெஜ்வாலா கொடுத்தப் பேட்டி காங்கிரஸ் வேறு ஒரு வியூகத்தில் காங்கிரஸ் இருப்பது தெரிய வந்துள்ளது. அந்தப் பேட்டியில் "ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ப காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கும். நாடு முழுவதுக்கும் ஏற்றார் போல ஒரே கூட்டணி அமைப்பது சாத்தியமில்லை" என்று தெரிவித்திருந்தார். மேலும் "ஒவ்வொரு மாநிலக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மாநிலங்களில் வெற்றிப் பெறுவதற்கு ஏதுவான கூட்டணி அமைக்கப்படும். 2019 தேர்தலில் மெகா கூட்டணி அமைக்க காங்கிரஸ்க்கு விருப்பமில்லை" என்ற குண்டையும் வீசினார் ரண்தீப் சூரெஜ்வாலா.

அதற்கான சில உதாரணங்களையும் உதித்தார் ரண்தீப் சூரெஜ்வால், அது " இப்போது மஹராஷ்ட்ராவில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸூடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆனால், இதே கூட்டணி குஜராத், ராஜஸ்தான், டெல்லியில் எப்படி செல்லுபடியாகும்" என்ற கேள்வியையும் எழுப்பினார். எனவே இதன் மூலம் அந்தத்ந்த மாநிலக் கட்சிகளின் பலம் மற்றும் பலவீனத்தின் அடிப்படையில் காங்கிரஸ் இம்முறை கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“நரேந்திர மோடி, பாஜ, ஆர்எஸ்எஸ்க்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் உருவாகும் மெகா கூட்டணி, பாஜ.வை வீழ்த்தும்” என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள்களுக்கு முன்புதான் தெரிவித்திருந்திருந்தார். மேலும் " பாஜக ஆர்எஸ்எஸ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக உருவாகும் “மகாகட்பந்தன்” எனப்படும் மெகா கூட்டணி, மக்களின் உணர்வாகும். அது சாதாரண அரசியல் கட்சி கிடையாது.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, 2019ம் ஆண்டு தேர்தலில் பாஜவை வீழ்த்தும்" என ஆவேசமாக பேசினார். ஆனால், இப்போது திடீரென இதில் மாற்றம் உருவாகியுள்ளது. இதிலிருந்து 2019 இல் எப்படியாவது வெற்றிப்பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் இப்போதே காங்கிரஸ் கூட்டணி வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.

POST COMMENTS VIEW COMMENTS