“மோடி எனக்கு ராமர்” - கொதித்தெழுந்த மனைவி யசோதாபென்


பிரதமர் மோடி தனக்கு ராமர் போன்றவர் என்று அவரது மனைவி யசோதா பென் கூறியுள்ளார். மோடி திருமணமாகாதவர் என்று குஜராத் முன்னாள் முதலமைச்சரும், மத்திய பிரதேச ஆளுநருமான ஆனந்திபென் கூறியிருந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் இவ்வாறு கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக யசோதாபென் தன்னுடைய சசோதரர் அசோக் மோடியின் மொபைல் போனில் ஒரு வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.  

அந்த வீடியோவில், “நரேந்திர மோடிக்கு திருமணம் ஆகவில்லை என்று ஆனந்தி பென் கூறியது எனக்கு ஆச்சர்யம் அளித்தது. அவராகத் தான் 2014 மக்களவை தேர்தலின் போது பிரமாணப் பத்திரத்தில் தான் திருமணமானவர் என்று கூறியிருந்தார். என்னுடைய பெயரையும் குறிப்பிட்டார். நன்கு படித்தவரான ஆனந்திபென் இவ்வாறு பேசியது எதிர்பாராதது. நாட்டின் பிரதமருடைய பெயருக்கும் களங்கம் விளைவிக்கக் கூடியது. எனக்கு அவர் மிகவும் மரியாதைக்குரியவர். என்னுடைய ராமர் அவர்” என்று கூறியுள்ளார்.

               

யசோதாபென் தன்னுடைய மொபைல் போனில் வீடியோ வெளியிட்டதை உறுதி செய்த அவரது சகோதரர் அசோக் மோடி கூறுகையில், “ஆனந்திபென்னின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வந்த போது அதனை நாங்கள் நம்பவில்லை. முக்கிய செய்திதாளான திவ்ய பாஸ்கரின் முதல் பக்கத்தில் இந்தச் செய்தி வெளியானது. ஆனந்தி பென்னின் பேச்சு தவறானது. அதனால், அவரது பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் வீடியோ பதிவு வெளியிட முடிவு செய்தோம்.  உண்மையில் மோடி யசோதாபென்னை திருமணம் செய்து கொண்டார்” என்றார்.

                                          

முன்னதாக, மத்திய பிரதேசத்தில் அங்கன்வாடி ஊழியர்களிடையே பேசுகையில், “பிரதமர் மோடி திருமணமாகாதவர் என்பது உங்களுக்கு தெரியும். இருப்பினும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பிரச்னைகளை நன்கு அறிந்தவர். பெண்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண பல்வேறு நலத் திட்டங்களை அவர் நிறைவேற்றியுள்ளார்” என்று ஆனந்திபென் பட்டேல் கூறியதாக குஜராத் நாளிதழ் திவ்ய பாஸ்கர் ஜூன் 19ம் தேதி செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

POST COMMENTS VIEW COMMENTS