காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி இல்லாதது ஏன் ? 


 

இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ஆட்சிக் கவிழும் போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், ஜம்மு காஷ்மீரில் மட்டும் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ஆட்சிக்கவிழும் போது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 356வது பிரிவின் படி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுகிறது. ஆனால் ஜம்மு காஷ்மீரில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 92இன் படி ஆளுநர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்படுகிறது.  முதன் முதலில் 1977ஆம் ஆண்டு தேசிய மாநாடு கட்சியைச் சேர்ந்த ஷேக் முகம்மது அப்துல்லாவுக்கான ஆதரவை காங்கிரஸ் கட்சி திரும்பப்பெற்ற‌தால் ஆளுநர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது. ‌ 

இரண்டாவது முறையாக 1986ஆம் ஆண்டு மார்ச் மாதம் ‌குலாம் முகம்மது ஷா தலைமையிலான அரசின் ஆதரவை காங்கிரஸ் திரும்பப் பெற்றதை அடுத்து, ஆளுநர் ஆட்சி அமைக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு ஜக்மோகன் ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து, முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஃபரூக் அப்துல்லா பதவி விலகியதால், மூன்றாவது முறை‌யாக ஆளுநர் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. ஆளுநர் தலைமையிலான இந்த ஆட்சி 6 வருடங்கள் 264 நாட்கள் நீடித்தது. 

நான்காவது முறையாக 2002ஆம் ஆண்டு தேர்தலில் தொங்கு சட்டப்பேரவை உருவானதால் 15 நாட்கள் ஆளுநர் ஆட்சி நீடித்தது. 2009ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியில் இருந்து மக்கள் ஜனநாயக கட்சி வெளியேறியதால் ஐந்தாவது முறையாக ஆளுநர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது. 2014ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தொங்கு சட்டப்பேரவை அமைந்ததால் ஆறாவது முறையாக ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 

2016ஆம் ஆண்டு முதல்வராக பதவி வகித்து வந்த முப்தி முகம்மது சையது உயிரிழந்ததால் ஆளுநர் ஆட்சி ஏழாவது முறையாக அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது எட்டாவது முறையாக ஆளுநர் ஆட்சி நடைமுறைக்கு வருகிறது. அதில் 2008 முதல் தற்போது வரை ஆளுநராக இருக்கும் வோராவின் பதவிக்காலத்தில் மட்டும் 4 முறை ஆளுநர் ஆட்சி அமலாகியிருக்கிறது.
 

POST COMMENTS VIEW COMMENTS