கலைந்தது சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா அரசு !


தெலுங்கானா அரசை அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் கலைத்தது. 

2014ஆம் ஆண்டில் ஆந்திரா இரண்டாக பிரிக்கப்பட்டு தெலுங்கானா தோன்றியது. அதே ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுடன் தெலுங்கானாவின் சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் சந்திரசேகர ராவ் தலைமையிலான ராஷ்டிர சமிதி கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. அவர் முதலமைச்சராக பதவியேற்றார். அடுத்த ஆண்டு மத்திய அரசின் ஆட்சி நிறைவடையும்போது, தெலுங்கானா அரசின் ஆட்சியும் நிறைவடைகிறது. இதனால் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலுடன் தெலுங்கானாவின் சட்டசபைத் தேர்தலும் நடத்தப்படும். 

இதனை விரும்பாத சந்திரசேகர ராவ் தங்கள் ஆட்சியை கலைத்துவிட்டு, முன்கூட்டியே தேர்தலை சந்திப்பது என்ற முடிவுக்கு வந்தார். இதுதொடர்பாக முடிவு செய்ய இன்று அமைச்சரவையை கூட்டினார். அதன்படி, தெலுங்கானா அரசை கலைத்துவிடலாம் என இன்று அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அரசை கலைப்பதற்கான பரிந்துரைக் கடிதம் ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மனிடம் கொடுக்கப்பட்டது. இதன்மூலம் தெலுங்கானா அரசு கலைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முன்கூட்டியே ஆட்சி கலைக்கப்படுவதால், இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய சட்டப்பேரவை தேர்தல்களுடன், தெலுங்கானா மாநிலத்தின் தேர்தலும் நடத்தப்படும். மக்களவை தேர்தலின்போது சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டால், மக்கள் மனநிலை மத்திய அரசு சிந்தனையில் இருக்கும் என்றும், அதனால் வெற்றி பாதிக்கப்படலாம் என்ற எண்ணமும் சந்திரசேகர ராவிற்கு இருந்தது. அதனால் இந்த அதிரடி முடிவை அவர் மேற்கொண்டுள்ளார்.

Read Also -> தன்பாலின உறவு குற்றமல்ல : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 

POST COMMENTS VIEW COMMENTS