62 பியூன் பணியிடம் - பி.ஹெச்டி படித்தவர்கள் உட்பட 93,000 பேர் விண்ணப்பம்


உத்தரபிரதேச மாநிலத்தில் 62 அலுவலக உதவியாளர் பணிக்கு சுமார் 93 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 

உத்தரபிரதேச காவல்துறையின் டெக்னிகல் பிரிவில் உள்ள அலுவலக உதவியாளர் பணிக்குதான் இவ்வளவு போட்டி. வெறும் 5 ஆம் வகுப்பு படித்தால் போதும் என்பதுதான் இந்தப் பணிக்கான தகுதியாக அறிவிக்கப்பட்டது. அதேபோல், சைக்கில் ஓட்ட தெரிய வேண்டும். ஆனால், விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள். ஆராய்ச்சி மாணவர்களும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளார். 

அதாவது ஒரு காலியிடத்துக்கு சுமார் 1500 பேர் போட்டியிடுகின்றனர். விண்ணப்பித்தவர்களில் 50 ஆயிரம் பேர் பட்டப்படிப்பு படித்தவர்கள். 20 ஆயிரம் பேர் முதுகலை பட்டம் பெற்றவர்கள். மூவாயிரம் பேர் ஆராய்ச்சி மேற்கொள்ளும் பி.ஹெச்டி படிப்பு படித்தவர்கள். 

இதுபோல் நடப்பது முதல் முறை அல்ல. கடந்த சில வருடங்களாகவே இதுபோன்ற செய்திகளை பார்க்க முடிகிறது. ஆராய்ச்சி மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் உரிய வேலை கிடைக்காமல் இதுபோன்ற வேலைகளுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். 2015ம் ஆண்டு 368 பியூன் பதவிக்கு சுமார் 23 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில், 250 பேர் பி.ஹெச்டி படித்தவர்கள். 

        

அலுவலக உதவியாளர் பணிக்கு தொடக்க சம்பளம் ரூ20 ஆயிரம் என்பதுதான் இங்கு குறிப்பிடத்தக்கது. உத்தரபிரதேச இளைஞர்களுக்கு உரிய வேலை வாய்ப்பினை கொடுத்த ஆளும் பாரதிய ஜனதா கட்சி தவறிவிட்டதாக எதிர்க்கட்சியான சமாஜ்வாடி குற்றம்சாட்டியுள்ளது. 

POST COMMENTS VIEW COMMENTS