இடஒதுக்கீட்டிற்காக 11வது நாளாக உண்ணாவிரதம் - 20 கிலோ குறைந்தார் ஹர்திக் படேல்


படேல் சமுதாயத்தினருக்காக கடந்த 10 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹர்திக் படேல் உடலின் எடை 20 கிலோ குறைந்துள்ளது.

2015 நடத்திய மாபெரும் போராட்டத்தின் மூன்றாம் ஆண்டு நினைவாக, அகமதாபாத் நகரில் உள்ள தனது பண்ணை வீட்டு வளாகத்தில் ஆகஸ்ட் 25-ம் தேதி மாலை 3 மணியளவில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை ஹர்திக் பட்டேல் தொடங்கினார். கடந்த 10 நாட்களுக்கு மேலாக அவர் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். படேல் சமுதாயத்தினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு மற்றும் விவசாயின்களை கடன்களை தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.

            

இந்நிலையில், உண்ணாவிரதத்தை தொடங்கிய போது 78 கிலோவாக இருந்த ஹர்திக்கின் எடை தற்போது 58 கிலோவாக குறைந்துள்ளது.  11வது நாளாக இன்றும் ஹர்திக் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதால் அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது. உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து ஹர்திக் சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே  ஆலோசனை வழங்கியுள்ளனர்.

             

ஹர்திக் படேலின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் உண்ணாவிரதம் நடக்கும் இடத்திற்கு சென்று அவரை விசாரித்து வருகிறார்கள். இடஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தி ஹர்திக் படேலின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சக்தி சிங் கோஹில் கூறுகையில், “ஹர்திக் விவசாயிகளுக்காக போராடி வருகிறார். குஜராத் மற்றும் அதன் மக்களின் மேம்பாட்டிற்காக ஹர்திக் போராடுகிறார். ஆனால், குஜராத் அரசு அவரிடம் பேசுவதற்கே தயாராக இல்லை. அவருடைய உண்ணாவிரதத்தை உடனடியாக நிறுத்த அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார். 

         

முன்னதாக, படேல் சமுதாயத்தினரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய இட ஒதுக்கீடு கோரி பட்டிடார் அனாமத் அந்தோலன் சமிதி அமைப்பின் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிகப்பெரிய போராட்டத்தை தொடங்கினார். இந்தப் போராட்டம் இந்திய அளவில் பெரிதாக பேசப்பட்டது. இந்தப் போராட்டத்தால் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

POST COMMENTS VIEW COMMENTS