15 ஆயிரம் லைக்குகள் இருந்தால்தான் எம்.எல்.ஏ சீட்டு : காங்கிரஸ் அதிரடி


மத்தியப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு அக்கட்சி புதுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. 

மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்குகளை வைத்திருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 15 ஆயிரம் லைக்குகள் பெற்றிருக்க வேண்டும், அவர்களுடைய ட்விட்டர் பக்கத்தை 5 ஆயிரம் பேர் தொடரவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் வாக்குச்சாவடி அளவில் செயல்படும் காங்கிரஸ் உறுப்பினர்களின் வாட்ஸ்அப் குழுவையும் வைத்திருக்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 

மத்தியப்பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் அனைத்து பதிவுகளுக்கும் லைக் போடுவதுடன், அவற்றை தங்கள் பக்கத்தில் பகிரவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அவர்களுடைய பெயர்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என விரும்புவோர் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தங்களுடைய சமூக வலைதள விவரங்களை கட்சி அலுவலத்தில் தெரிவிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் களத்தில் சமூகவலைத்தளங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து பாரதிய ஜனதாவும், காங்கிரஸும் போட்டி போட்டுக்கொண்டு அவற்றில் விளம்பரம் செய்து வருகின்றன.

POST COMMENTS VIEW COMMENTS