கேரள நிலச்சரிவில் 483 பேர் உயிரிழப்பு - 140 பேர் காணவில்லை


கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 483 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏராளமானோர் தங்கள் உடமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். வெள்ளப் பாதிப்பின் போது 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாமில் தங்கியிருந்தனர். மழை குறைந்ததை தொடர்ந்து முகாமில் தங்கியிருந்தவர்கள் வீடு திரும்பத் தொடங்கினர். ஆனால் வீடுகளை முழுமையாக இழந்தவர்கள் தொடர்ந்து முகாமிலேயே இருக்கின்றனர். முகாம்களில் தங்கியிருப்பவர்களை அரசியல் பிரமுகர்கள், நடிகர், நடிகைகள் உட்பட பல்வேறு தரப்பினரும் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

               

இந்நிலையில், கேரள சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், வரலாறு காணாத இயற்கை பேரிடரால் 483 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 140 பேரைக் காணவில்லை என்றும் கூறினார். 14 லட்சத்து 50 ஆயிரத்து 707 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்து  இருந்ததாகவும் கேரளாவில் தற்போதும் இயங்கி வரும் 305 நிவாரண முகாம்களில் 59 ஆயிரத்து 296 பேர் தங்கி உள்ளதாகவும் தெரிவித்த அவர், ராணுவத்தினரின் உதவிகளால் மக்கள் பலர் சரியான நேரத்தில் மீட்கப்பட்டதாகவும் கூறினார். 

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க உதவிய ராணுவம் உள்பட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ள பினராயி விஜயன், இயல்பு நிலையை மீட்டெடுப்பது சவாலானது என்றும் தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS