வெளியாகிறது பாலியல் குற்றவாளிகள் பெயர் பதிவேடு  


பெண்களிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களின் பெயர்களைக் கொண்ட பதிவேட்டை மத்திய அரசு வெளியிடுகிறது. 

பெண்களிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களின் பெயர்களைக் கொண்ட பதிவேட்டை மத்திய அரசு அடுத்த மாதம் வெளியிடுகிறது. இதன்மூலம், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் அவமானப்படுத்தப்பட உள்ளதாக டெல்லியில் உள்துறை அமைச்சக உயரதிகாரிகள் தெரிவித்தனர். 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை 3 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கூறிய அவர்கள், பாலியல் குற்றம் தொடர்பாக தண்டிக்கப்படுவர்களின் பெயர் இந்தப் பதிவேட்டில் இடம்பெறும் என்றும் தெரிவித்தனர். 

பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் பராமரிக்கும் என்றும், இதன்மூலம், புலன் விசாரணை அமைப்புகள் விவரங்களை எளிதாகப் பெற்று தொடர் குற்றவாளிகளை அடையாளம் காண முடியும் என்றும் அதிகாரிகள் கூறினர். 2016ஆம் ஆண்டில் 38 ஆயிரத்து 947 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதியப்பட்ட நிலையில், குற்றவாளிகளின் பெயர்களை அறிந்து பொதுமக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வழியேற்படும் என்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

POST COMMENTS VIEW COMMENTS