“எதிர்கருத்து என்பது ஜனநாயகத்தின் பாதுகாப்பு வால்வு” - வரவர ராவ் கைதில் திருப்பம்


பிரதமர் மோடியை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட இடதுசாரி ஆதரவாளர்கள் 5 பேரையும் வீட்டுக்காவலில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் கடந்த ஆண்டு டிசம்பரில் இடதுசாரி ஆதரவாளர்கள் நடத்திய மாநாட்டை தொடர்ந்து கோரேகாந் பீமா கிராமத்தில் வன்முறை வெடித்தது. இந்தச் சூழலில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கடந்த ஜூன் மாதம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பெறப்பட்ட கடிதம் ஒன்றில் ராஜீவ்காந்தி கொலை பாணியில் பிரதமர் மோடியை கொலை செய்வோம் என மாவோயிஸ்ட்டுகள் எழுதி வைத்திருந்தது தெரிய வந்தது. அந்தக் கடிதத்தில், ஐதராபாத்தை சேர்ந்த இடதுசாரி எழுத்தாளர் வரவர ராவின் பெயரும் இருந்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று திடீரென ஐதராபாத்தில் சோதனையிட்ட காவல்துறையினர் எழுத்தாளர் வரவர ராவை கைது செய்தனர். அதே போல தெலங்கானா, மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து மாவோயிஸ்ட்டு ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சுதா பரத்வாஜ், வெர்னன் கோன்சல்வ்ஸ், அருண் பெரைரா, கவுதம் நலகா ஆகியோரை கைது செய்தனர். இந்தக் கைது நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் , எழுத்தாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். 5 பேரின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், எதிர்கருத்து என்பது ஜனநாயகத்தில் இருக்கும் பாதுகாப்பு வால்வு போன்றது என்றார். குக்கரிலும் பாதுகாப்பு வால்வு இல்லையென்றால் அழுத்தம் காரணமாக அது வெடிக்கும் நிலை ஏற்படும் என்றும் குறிப்பிட்டார். பின் இருதரப்பையும் கேட்ட நீதிபதி கைது செய்யப்பட்ட 5 பேரையும் வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் இடதுசாரி ஆதரவாளர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி மகாராஷ்டிரா அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS