பணமதிப்பிழப்பால் பயனில்லையா ? அதிர்ச்சியளித்த ஆர்பிஐ அறிக்கை 


நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் ரூ.10,720 கோடி பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் திரும்ப வரவில்லை என்று மத்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து புதிதாக அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இந்திய விமானப்படை விமானம் மூலம் நாடு முழுவதும் கொண்டு சேர்க்கப்பட்டன. 


மேலும் பணமதிப்பிழப்புக்குப் பிறகு 2016-ல் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி 7 ஆயிரத்து 965 கோடி ரூபாயை செலவழித்துள்ளதாக கூறப்பட்டது. இது 2015ஆம் ஆண்டு புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க செலவழித்ததை விட இரண்டு மடங்கு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டது. பணமதிப்பிழப்பால் 2016 - 2017ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் வருவாய் 23 புள்ளி 5 சதவீதம் குறைந்துவிட்டதாகவும், அதே நேரத்தில் செலவு 107 புள்ளி 8 சதவீதம் அதிகரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. கறுப்புப் பணத்தை ஒழிக்கவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 99 சதவீதம் ரிசர்வ் வங்கிக்கு மீண்டும் வந்துசேர்ந்தது முன்னர் கூறப்பட்டு இருந்தது.

இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக பொது மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். பொது மக்கள் ஏடிஎம் வாசல்களிலும், வங்கி வாசல்களிலும் கால்கடுக்க காத்திருந்து தங்கள் பணத்தை எடுத்தனர். இதன் காரணமாக திருமணம், மருத்துவ செலவு போன்ற அவசர செலவுகளுக்குக் கூட பணம் பெறுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது. மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை அரசின் பொருளாதார நடவடிக்கையின் தோல்வி என்றும் விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் 2017 - 2018 ஆம் ஆண்டுக்கான மத்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அதில் பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி முடிந்தது. மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்பு வங்கிகளுக்கு இதுவரை ரூ.15.3 லட்சம் கோடி பழைய நோட்டுகள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் " விநியோகிக்கப்பட்ட ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளில் ரூ.15 லட்சத்து 44 கோடி ரூபாயில், ரூ.15 லட்சத்து 31 கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதாவது அச்சிட்டு விநியோகிக்கப்பட்ட மொத்த பணத்தில் 99.30 % பணம் வங்கிகளில் டெபாசிட்டாக மீண்டும் வங்கிகளுக்கே திரும்பி விட்டது. கறுப்பு பண ஒழிப்பு என்று கூறி எடுக்கப்பட்ட நடவடிக்கையால் வெறும் 13 ஆயிரம் கோடி பணம்தான் வங்கிக்கு வரவில்லை. 


 

POST COMMENTS VIEW COMMENTS