மகாராஷ்டிராவில் தமிழக பெண் அதிகாரி மீது தாக்குதல் முயற்சி


மகாராஷ்டிராவில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி வான்மதி, பழங்குடியின மாணவர்களின் தாக்குதலில் இருந்து தப்பினார். 

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வான்மதி. இவர் 2015ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்வாகி, நந்தர்பார் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்ட அலுவலராக பணியாற்றி வருகிறார். அங்கு விடுதியில் தங்கிப் படிக்கும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கான உணவு மானியத்தை, உணவாக வழங்காமல், நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இதுதொடர்பாக திட்ட அலுவலர் வான்மதியின் அலுவலகத்தில் மாணவர்கள் சிலர் போராட்டம் நடத்தினர். அப்போது ஆட்சியர் அலுவலகத்துக்கு காரில் புறப்படும்போது, திட்ட அதிகாரி வான்மதியின் கார் மீதேறிய சிலர், கல்வீசித் தாக்கத் தொடங்கினர். இதில் கார் கண்ணாடிகள் சேதமடைந்தன. கார் ஓட்டுநர் யோகேஷ் பாட்டிலுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷடவசமாக அதிகாரி வான்மதி காயம் ஏதுமின்றி தப்பினார்.

Read Also -> 6 மாதத்தில் 6,000 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி : ரயில்வே அமைச்சர் 

POST COMMENTS VIEW COMMENTS