ஓலா டிரைவர் மீது பெண் வாடிக்கையாளர் ‘வில்லங்க’ புகார் 


பெங்களூருவில் ஓலா டிரைவர் தனது பயணத்தின் போது ஆபாச படங்களை பார்த்ததாக பெண் வாடிக்கையாளர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

ஏலஹன்கா பகுதியில் இருந்து காலை 6.30 மணிக்கு அந்தப் பெண் காரில் பயணம் செய்துள்ளார். ஜே.பி.நகரில் உள்ள தனது அலுவலகத்திற்கு அவர் சென்று கொண்டிருந்தார். அந்தப் பயணத்தில் டிரைவர் காரினை ஓட்டிக் கொண்டே தனது மொபைலில் ஆபாச படம் பார்த்துள்ளார். மொபைலில் படம் ஓடுவது பின்னால் உள்ள பெண்ணுக்கு தெரியும்படி இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால், கோபமடைந்த அந்தப் பெண் படத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால், அவர் சொல்வதை கேட்டும், கேட்காததுமாக அந்த டிரைவர்  இருந்துள்ளார். அதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற அந்தப் பெண் கஸ்துர்பா சாலை என்ற இடத்தில் காரை நிறுத்தியுள்ளார். தனது அலுவலகத்திற்கு சென்ற அவர் தனது நண்பர்களிடம் நடந்ததை கூறியுள்ளார். பின்னர், இதுதொடர்பாக கப்பன் பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதேபோல், ஓலா வாடிக்கையாளர் சேவை மையத்திலும் புகார் அளித்துள்ளார். 

அந்தப் பெண் அளித்து புகார் தொடர்பாக, டிரைவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து ஓலா நிறுவனம், “இந்தச் சம்பவம் எங்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால், எங்களுக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்த டிரைவரின் உரிமத்தை நீக்கியுள்ளோம். எங்களது வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் எப்பொழுதும் துணை நிற்போம். நடைபெற்று வரும் விசாரணையில் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்” என்று கூறியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS