மறைந்த தம்பியின் சிலைக்கு ராக்கி கட்டிய சகோதரி


சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக் ஷா பந்தன் பண்டிகை நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சகோதரிகள் ராக்கி கயிறு வாங்குவதற்காக கடைகளுக்கு படையெடுத்ததால், விற்பனை களைக்கட்டியது.

சகோதர - சகோதரியின் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ரக் ஷா பந்தன் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் வண்ணத் திருவிழாவான ஹோலிக்கு நிகராக இந்தப் பண்டிகை கொண்டாடப்படுவதால், அங்கு ராக்கி கயிறுகள் அமோகமாக விற்பனையானது. இந்த நன்னாளில், சகோதரர்கள், தங்களது சகோதரிகளுக்கும், உடன் பிறவா பெண்களுக்கும் இனிப்புகள் மற்றும் அன்பளிப்புகளை பரிசளித்து தங்களது சகோதர பாசத்தை வெளிப்படுத்துவர். 

அதே போல் பெண்களும், தங்களின் சகோதரர்கள் மற்றும் உடன் பிறவா சகோதரர்களின் கைகளின் ராக்கி கயிறு கட்டி அன்பை பரிமாறிக் கொள்வர். தங்களது துயரத்தில் பங்கேற்க, தோள் கொடுக்க சகோதரர் இருக்கிறார் என்பதை பெண்கள் உணரவும், அவர்களுக்கு ஆண்கள் எப்போதும் பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவும் ரக் ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

சத்தீஸ்கரின் தண்டிவாடா மாவட்டத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த நக்சல் தாக்குதலில் ராஜேந்திர குமார் என்ற பாதுகாப்பு படை வீரர் வீர மரணமடைந்தார். இதையடுத்து ராஜேந்திர குமாரின் தியாகத்தை போற்றும் வகையில் அவரது சகோதரி சாந்தி உட்கே வீட்டு வளாகத்தில் சிலை ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில் சகோதரத்துவத்தை போற்றும் ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தை முன்னிட்டு ராஜேந்திரனின் சிலைக்கு சகோதரி சாந்தி உட்கே ஆரத்தி எடுத்து, ராக்கி கட்டினார். தம்பி மறைந்தாலும் அவரது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ரக்ஷா பந்தனை கொண்டாடுவது மகிழ்ச்சியளிப்பதாக சாந்தி உட்கே நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS