’சுப்ரமணியன்‌ சுவாமியின் பதிவு அதிகாரப்பூர்வமானது அல்ல’: பாஜக


திமுக தலைவர் கருணாநிதி அஞ்சலி நிகழ்வில் அமித்ஷா பங்கேற்க மாட்டார் என்ற சுப்ரமணியன்‌ சுவாமியின் ட்விட்டர் பதிவு அதிகாரப்பூர்வமானது அல்ல என்று பாஜக மாநில ஊடகப்பிரிவு தலைவர் சுப்ரமணிய பிரசாத் தகவல் தெரிவித்துள்ளார்.

மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் நினைவைப்போற்றும் வகையில் நினைவேந்தல் நிகழ்ச்சி, 30 ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அதனை ஏற்று நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. கடந்த 16ம் தேதி அன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானதை தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகளில், பாஜக நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பரஸ்பரம் கலந்துகொள்வது அரசியல் நாகரீகம் என்பதை தாண்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சென்னையில் நடைபெறும் திமுக தலைவர் கருணாநிதியின் அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக, அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பாரதிய ஜனதா கட்சியும் உறுதி செய்த நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியசாமி, அமித்ஷா கூட்டத்தில் கலந்துகொள்ள போவதில்லை என்ற முடிவை எடுத்திருப்பதாகவும், இது மகிழ்ச்சியான முடிவு என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து சுப்பிரமணியன் சுவாமியின் இந்தச் செய்தி அதிகாரப்பூர்வமானது அல்ல என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஊடகப் பிரிவு தலைவர் சுப்ரமணிய பிரசாத் தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS