இட ஒதுக்கீடு தொடர வேண்டுமா? உச்சநீதிமன்றம் கேள்வி


காலங்காலமாக இடஒதுக்கீடு தொடர வேண்டுமா என மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அரசுப் பணி பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க தேவையில்லை என 2006ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில், 2006-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய 7 நீதிபதிகள் அமர்வை நியமிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. 

தொடர்ந்து எஸ்சி, எஸ்டி சங்கம் சார்பில், உச்சநீதிமன்றத்தின் கழிவறையை தூய்மைப்படுத்தும் பணியில் 100 சதவிகிதம் எஸ்சி பிரிவு ஊழியர்களே உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த பணியை வேறு யாரும் விரும்புவதில்லை என்றும், அதே நேரம் உயர் பதவிகளில் அந்தப் பிரிவினர் புறக்கணிக்கப்படுகிறார்கள் எனவும், எனவே தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு அரசு பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு அவசியம் என வாதிடப்பட்டது. 

இதனை கேட்ட தலைமை நீதிபதி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஐஏஎஸ் பணியில் சேர்ந்து பதவி உயர்வில் இட ஒதுக்கீடு பெற்று தலைமை செயலாளராக ஆகி விடுகிறார் என வைத்து கொண்டால், அவரின் பேரப் பிள்ளைகளுக்கும் அரசுப் பணி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கோருவது எந்த வகையில் நியாயம் என வினவினார். இடஒதுக்கீடு காலங்காலமாக தொடர வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறதா எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து வழக்கு விசாரணையானது வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read Also -> 'பாதுகாப்புத்துறைக்கு பெண்கள் அதிகம் வர வேண்டும்' : நிர்மலா சீதாராமன்

POST COMMENTS VIEW COMMENTS