முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 139.99 அடி வரை உயர்த்தலாம்


ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 139.99 அடி வரை தேக்கிக்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகவே தொடர வேண்டும் என வாதிட்டார். அப்போது மத்திய அரசு தரப்பில், அணை நீர்மட்டத்தை இரண்டு அல்லது மூன்று அடி வரை குறைத்துக் கொள்ள அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதனை ஏற்ற நீதிமன்றம், வரும் 31-ஆம் தேதி வரை அணை நீர்மட்டத்தை 139.99 அடியாகவே தொடர உத்தரவிட்டது. மேலும், தொடர்ந்து அணையின் நிலவரத்தைக் கண்காணிக்க துணைக்குழுவுக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணையானது செப்டம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நேற்றைய தினம் வழக்கு விசாரணையின்போது, கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட திடீரென முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதே காரணம் என கேரள அரசு தமிழகம் மீது குற்றம்சாட்டியது. இந்த நிலையில், தமிழக அரசு இன்று பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தது, அதில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 2 டிஎம்சி நீர் திறப்பதற்கு முன்பே இடுக்கி அணையில் இருந்து 14 டிஎம்சி நீர் திறக்கப்பட்டதே வெள்ளம் ஏற்பட காரணம் என தெரிவிக்கப்பட்டது. கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு தமிழகத்தை குற்றம் சொல்வதை ஏற்க முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS