கண்டுபிடிக்கப்பட்டது கேன்சரைக் கட்டுப்படுத்தும் மரபணு


மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் புதிய மரபணுவை ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தற்காலிகமாக சி6 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த மரபணுவானது புற்றுநோய், நீரிழிவு நோய், முடக்கு வாதம் உள்ளிட்ட பல நோய்களைக் கட்டுப்படுத்தக் கூடியது.மனித உடலில் உருவாகும் சில புரதங்கள் உடலில் நோய்க் கிருமிகள் பரவக் காரணமாக உள்ளன, அவை உருவாவதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டதே சி6 மரபணு. இதன் மூலம் வைரஸ் உள்ளிட்ட கிருமிகள் உடலில் பரவுவதைத் தடுக்கலாம்.

இந்த சி6 மரபணு கடந்த 50 கோடி ஆண்டுகளாக நிலைபெற்று உள்ளதாகவும், ஆனால் இதன் பயன்பாடு இப்போதுதான் உணரப்படுவதாகவும் இதனைக் கண்டறிந்த ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள் தெரிவித்து உள்ளனர்.மனித உடலின் மரபணுக்கள் கடந்த 2003ஆம் ஆண்டில்தான் முழுவதுமாக வரிசைப்படுத்தப்பட்டன. ஆனாலும், அவற்றில் இன்னும் ஆயிரக்கணக்கான மரபணுக்கள் ஆய்வு செய்யப்படாமல் உள்ளன. இன்னும் மனித உடலில் சி6 போல எவ்வளவு நோய் எதிர்ப்பு மரபணுக்கள் உள்ளன என்பது மிகப்பெரிய கேள்வி.

மரபணு மருத்துவமே மருத்துவத் துறையின் எதிர்காலமாகப் பார்க்கப்படும் சூழலில் சி6ன் கண்டுபிடிப்பு இன்னும் பல திசைகளைக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல்கள் : இந்தியன் எக்ஸ்பிரஸ்

POST COMMENTS VIEW COMMENTS