கொடைக்கானலில் புதிய ரோஜா பூங்கா 


கொடைக்கானலில் முதலமைச்சர் பழனிசாமி புதிய ரோஜா பூங்காவை திறந்து வைக்க உள்ளார். இதனால் சுற்றுலாவாசிகள் இனி வரும் காலங்களில் அதனையும் கண்டுக்களிக்கலாம். 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 2013 ம் ஆண்டு ரூபாய் 6 கோடி செலவில், தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான பழப் பண்ணையை சுற்றுலா பயணிகள் வசதிக்காக ரோஜா பூங்காவாக மாற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார். ஆகவே அவரது ஆணைக்கு இணங்க அதற்கான முதற்கட்ட வேலைகள் கடந்த 5 வருடங்களாக நடைப்பெற்று வந்தது. அந்த வேலைகள் முடிவடைந்த நிலையில் மேலும் 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அதனை தொடர்ந்து படுகைகள் அமைக்கும் பணி, பழைய கட்டிடங்களை புதுப்பித்தல், பதினைந்தாயிரம் ரோஜா நாற்றுகள் நடுதல் உள்ளிட்ட இரண்டாம் கட்ட வேலைகள் துரித கதியில் நடைபெற்றது. வரும் 19 ம் தேதி, நடைப்பெற உள்ள மலர்க் கண்காட்சியின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார் என தோட்டக்கலைத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பூங்கா திறக்கப்படும் பட்சத்தில், பிரயண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா மற்றும் ரோஜா பூங்கா என மூன்று தோட்டக்கலைத்துறை பூங்காக்கள் இனி கொடைக்கானலில் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

POST COMMENTS VIEW COMMENTS