சென்னையில் எந்தெந்த மருத்துவமனைகள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறவில்லை: அறிக்கை அளிக்க உத்தரவு


சென்னையில் எந்தெந்த மருத்துவமனைகள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியைப் பெறவில்லை உள்ளிட்டவை குறித்து வரும் 12ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையிலுள்ள 364 மருத்துவமனைகளில் நீர்ம மருத்துவக் கழிவுகள் சுத்திகரிப்பு செய்யப்படாமல் கழிவு நீர்க் கால்வாயில் கலக்கக் கூடாது என உத்தரவிடக்கோரி ஜவஹர்லால் சண்முகம் என்பவர் தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார்.

அனைத்து மருத்துவமனைகளிலும் நீர்ம கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சென்னையில் 90 மருத்துவமனைகள் தான் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்றுள்ளன என்றும், மீதமுள்ள 274 மருத்துவமனைகள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியைப் பெறவில்லை என்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அப்போது இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் எந்தெந்த மருத்துவமனைகள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியைப் பெறவில்லை, பெறாததன் காரணங்கள் என்ன உள்ளிட்டவை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

POST COMMENTS VIEW COMMENTS