ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசரச் சட்டம்: கருணாநிதி


ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என மத்திய அரசை திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டத்தை திருத்தாமல், ஜல்லிக்கட்டு விளையாட்டை அனுமதிக்க வசதியாக ஒரு புதிய பிரிவை இயற்றாமல் மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது தவறு எனக்கூறியிருக்கிறார். அதனால் தான் அந்த அறிவிக்கைக்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உடன்படவில்லை என கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு நீதிமன்றத் தீர்ப்பை, அரசியலமைப்பு வழங்கியுள்ள அதிகாரப்படி மத்திய அரசோ அல்லது மாநில அரசோ மாற்றி அமைக்க முடியும் என உச்சநீதிமன்றமே கூறியிருப்பதாக அவர் நினைவுகூர்ந்திருக்கிறார்.

இதுதவிர, விளையாட்டு பொழுதுபோக்கு போன்றவை, மாநிலங்களின் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகவும், ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டத்தை பிறப்பிக்குமாறு ஆளுநரிடம் கேட்பதே போதுமானது என்றும் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியிருப்பதையும் கருணாநிதி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஆகவே, இப்பிரச்னையில் பிரதமர் மோடி உடனடி நடவடிக்கை எடுத்து அவசரச்சட்டம் இயற்றி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த உதவிடுமாறு கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS