ஜல்லிக்கட்டு போட்டிக்கு மீண்டும் தடை: மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு- ராமதாஸ்


ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு மீண்டும் விதிக்கப்பட்டுள்ள தடைக்கு, மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2014-ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு தடை விதித்ததாக கூறியுள்ளார். அதன்பின்னர், இந்த விஷயத்தில், மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு தவறான நம்பிக்கையை தரும் செயல்களில் ஈடுபட்டதாக, ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தடையை சீராய்வு மனு மூலம் அகற்ற முடியாவிட்டால், காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கி சட்டத்திருத்தம் செய்யலாம் என தொடக்கத்திலிருந்தே தாம் வலியுறுத்தி வருவதாகவும், ராமதாஸ் கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துவதுடன், உச்சநீதிமன்றம் தடை விதித்துவிட்டது என ஒதுங்கி விடாமல், மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS