தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வருகிற 20-ம் தேதி தொடக்கம்


தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வருகிற 20-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் இன்று வெளியிட்டுள்ளார்.

ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், பேரவைக் கூட்டத்தின் முதல் நாளில் ஆளுநர் உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு சபாநாயகர் தனபால் தலைமையில் கூடி, பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

அண்மையில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சில மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தின்போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த புகார்களை இந்தக் கூட்டத் தொடரில் எதிர்க் கட்சிகள் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டதாக எதிர்க் கட்சிகள் தொடர்ந்து அரசு மீது குற்றம்சாட்டி வரும் நிலையில், இது சட்டப்பேரவையில் அனலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

POST COMMENTS VIEW COMMENTS